15. அவன் சொன்னது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் என் தகப்பனாகிய தாவீதுக்குத் தம்முடைய வாக்கினால் சொன்னதைத் தம்முடைய கரத்தினால் நிறைவேற்றினார்.
16. அவர் நான் என் ஜனமாகிய இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணின நாள்முதற்கொண்டு, என் நாமம் விளங்கும்படி, ஒரு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்று நான் இஸ்ரவேலுடைய எல்லாக் கோத்திரங்களிலுமுள்ள ஒரு பட்டணத்தையும் தெரிந்துகொள்ளாமல் என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிகாரியாயிருக்கும்படி தாவீதையே தெரிந்துகொண்டேன் என்றார்.
17. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்கிற விருப்பம் என் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தில் இருந்தது.
18. ஆனாலும் கர்த்தர் என் தகப்பனாகிய தாவீதை நோக்கி: என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்கிற விருப்பம் உன் மனதிலே இருந்தது நல்லகாரியந்தான்.
19. ஆகிலும் நீ அந்த ஆலயத்தைக் கட்டமாட்டாய், உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் குமாரனே என் நாமத்திற்கு அந்த ஆலயத்தைக் கட்டுவான் என்றார்.
20. இப்போதும் கர்த்தர் சொல்லிய தம்முடைய வார்த்தையை நிறைவேற்றினார்; கர்த்தர் சொன்னபடியே, நான் என் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத்தில் எழும்பி, இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டினேன்.
21. கர்த்தர் நம்முடைய பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினபோது, அவர்களோடே பண்ணின உடன்படிக்கை இருக்கிற பெட்டிக்காக அதிலே ஒரு ஸ்தானத்தை உண்டாக்கினேன் என்றான்.
22. பின்பு சாலொமோன்: கர்த்தருடைய பலிபீடத்திற்குமுன்னே இஸ்ரவேல் சபையாரெல்லாருக்கும் எதிராக நின்று, வானத்திற்கு நேராய்த் தன் கைகளை விரித்து:
23. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, மேலே வானத்திலும் கீழே பூமியிலும் உமக்கு ஒப்பான தேவன் இல்லை; தங்கள் முழு இருதயத்தோடும் உமக்கு முன்பாக நடக்கிற உமது அடியாருக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காத்து வருகிறீர்.
24. தேவரீர் என் தகப்பனாகிய தாவீது என்னும் உம்முடைய தாசனுக்குச் செய்த வாக்குத்தத்தத்தைக் காத்தருளினீர்; அதை உம்முடைய வாக்கினால் சொன்னீர்; இந்நாளில் இருக்கிறபடி, உம்முடைய கரத்தினால் அதை நிறைவேற்றினீர்.
25. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் என் தகப்பனாகிய தாவீது என்னும் உம்முடைய தாசனை நோக்கி: நீ எனக்கு முன்பாக நடந்ததுபோல, உன் குமாரரும் எனக்கு முன்பாக நடக்கும்படி தங்கள் வழியைக் காப்பார்களேயானால், இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் புருஷன் எனக்கு முன்பாக உனக்கு இல்லாமற்போவதில்லை என்று சொன்னதை இப்பொழுது அவனுக்கு நிறைவேற்றும்.
26. இஸ்ரவேலின் தேவனே, என் தகப்பனாகிய தாவீது என்னும் உம்முடைய தாசனுக்குச் சொன்ன உம்முடைய வார்த்தை மெய்யென்று விளங்குவதாக.
27. தேவன் மெய்யாக பூமியிலே வாசம்பண்ணுவாரோ? இதோ, வானங்களும் வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்?
28. என் தேவனாகிய கர்த்தாவே, உமது அடியேன் இன்று உமது சந்நிதியில் செய்கிற விண்ணப்பத்தையும் மன்றாட்டையும் கேட்டு, உமது அடியேனுடைய விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் திருவுளத்தில் கொண்டருளும்.