லேவியராகமம் 13:28-46 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

28. படரானது தோலில் பெருகாமல், அவ்வளவில் நின்று சுருங்கியிருந்ததாகில், அது சூட்டினால் உண்டான தழும்பு; ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அது சூட்டினால் வந்த வேக்காடு.

29. புருஷனுக்காகிலும் ஸ்திரீக்காகிலும் தலையிலாவது தாடியிலாவது ஒரு சொறி உண்டானால்,

30. ஆசாரியன் அதைப் பார்த்து, அவ்விடம் மற்றத் தோலைப்பார்க்கிலும் பள்ளமும் அதிலே மயிர் பொன் நிறமும் மிருதுவுமாயிருக்கக்கண்டால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அது தலையிலும் தாடியிலும் உண்டாகிற சொறிகுஷ்டம்.

31. ஆசாரியன் அந்தச் சொறிகுஷ்டத்தைப் பார்க்கும்போது, அவ்விடம் மற்றத்தோலைப்பார்க்கிலும் பள்ளமாயிராமலும், அதிலே கறுத்த மயிர் இல்லாமலும் இருக்கக்கண்டால், ஆசாரியன் அவனை ஏழுநாள் அடைத்துவைத்து,

32. ஏழாம்நாளில் ஆசாரியன் அதைப்பார்க்கக்கடவன்; அந்தச் சொறி இடங்கொள்ளாமலும், அதிலே பொன்நிறமயிர் இல்லாமலும், அவ்விடம் மற்றத் தோலைப்பார்க்கிலும் பள்ளமில்லாமலும் இருந்தால்,

33. அந்தச் சொறியுள்ள இடந்தவிர, மற்ற யாவையும் அவன் சிரைத்துக்கொள்ளக்கடவன்; பின்பு, ஆசாரியன் இரண்டாந்தரம் அவனை ஏழுநாள் அடைத்துவைத்து,

34. ஏழாம்நாளில் அதைப் பார்க்கக்கடவன்; சொறி தோலில் இடங்கொள்ளாமலும், அவ்விடம் மற்றத் தோலைப்பார்க்கிலும் பள்ளமில்லாமலும் இருந்தால், ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்தபின் சுத்தமாயிருப்பான்.

35. அவன் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கப்பட்டபின், அந்தச் சொறி தோலில் இடங்கொண்டதானால்,

36. ஆசாரியன் அவனைப் பார்க்கக்கடவன்; சொறி தோலில் இடங்கொண்டிருந்தால், அப்பொழுது மயிர் பொன்நிறமா அல்லவா என்று ஆசாரியன் விசாரிக்க வேண்டியதில்லை; அவன் தீட்டுள்ளவனே.

37. அவன் பார்வைக்கு அந்தச் சொறி நீங்கி, அதில் கறுத்தமயிர் முளைத்ததேயாகில், சொறி சொஸ்தமாயிற்று; அவன் சுத்தமுள்ளவன்; ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்.

38. ஒரு புருஷனுக்காகிலும் ஸ்திரீக்காகிலும் அவர்கள் சரீரத்தின்மேல் வெள்ளைப் புள்ளிகள் உண்டாயிருந்தால்.

39. ஆசாரியன் பார்க்கக்கடவன்; அவர்கள் சரீரத்திலே மங்கின வெள்ளைப் புள்ளிகள் இருந்தால், அது தோலில் எழும்புகிற வெள்ளைத்தேமல்; அவர்கள் சுத்தமுள்ளவர்கள்.

40. ஒருவனுடைய தலைமயிர் உதிர்ந்து, அவன் மொட்டையனானாலும், அவன் சுத்தமாயிருக்கிறான்.

41. அவனுடைய முன்னந்தலை மயிர் உதிர்ந்தால், அவன் அரைமொட்டையன்; அவனும் சுத்தமாயிருக்கிறான்.

42. மொட்டைத்தலையிலாவது அரைமொட்டைத்தலையிலாவது சிவப்புக்கலந்த வெண்மையான படர் உண்டானால், அது அதில் எழும்புகிற குஷ்டம்.

43. ஆசாரியன் அவனைப் பார்க்கக்கடவன்; அவனுடைய மொட்டைத்தலையிலாவது அரைமொட்டைத்தலையிலாவது, மற்ற அங்கங்களின்மேல் உண்டாகும் குஷ்டத்தைப்போல, சிவப்புக்கலந்த வெண்மையான தடிப்பு இருக்கக்கண்டால்,

44. அவன் குஷ்டரோகி, அவன் தீட்டுள்ளவன்; ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அவன் வியாதி அவன் தலையிலே இருக்கிறது.

45. அந்த வியாதி உண்டாயிருக்கிற குஷ்டரோகி வஸ்திரம் கிழிந்தவனாயும், தன் தலையை மூடாதவனாயும் இருந்து, அவன் தன் தாடியை மூடிக்கொண்டு, "தீட்டு, தீட்டு" என்று சத்தமிடவேண்டும்.

46. அந்த வியாதி அவனில் இருக்கும் நாள்வரைக்கும் தீட்டுள்ளவனாக எண்ணப்படக்கடவன்; அவன் தீட்டுள்ளவனே; ஆகையால், அவன் தனியே குடியிருக்கவேண்டும்; அவன் குடியிருப்பு பாளயத்துக்குப் புறம்பே இருக்கக்கடவது.

லேவியராகமம் 13