8. அவன் ஒரு சொப்பனத்தைப்போல் பறந்துபோய்க் காணப்படாதவனாவான்; இரவில் தோன்றும் தரிசனத்தைப்போல் பறக்கடிக்கப்படுவான்.
9. அவனைப் பார்த்த கண் இனி அவனைப் பார்ப்பதில்லை; அவன் இருந்த ஸ்தலம் இனி அவனைக் காண்பதில்லை.
10. அவன் பிள்ளைகள் எளிமையானவர்களின் சகாயத்தைத் தேடுவார்கள்; அவன் பறித்ததை அவன் கைகள் திரும்பக் கொடுக்கவேண்டியதாகும்.
11. அவன் எலும்புகள் அவனுடைய வாலவயதின் பாவங்களினால் நிறைந்திருந்து, அவனோடேகூட மண்ணிலே படுத்துக்கொள்ளும்.
12. பொல்லாப்பு அவன் வாயிலே இனிமையாயிருப்பதால், அவன் அதைத் தன் நாவின்கீழ் அடக்கி,
13. அதை விடாமல் பதனம்பண்ணி, தன் வாய்க்குள்ளே வைத்துக்கொண்டிருந்தாலும்,
14. அவன் போஜனம் அவன் குடல்களில் மாறி, அவனுக்குள் விரியன்பாம்புகளின் பிச்சாய்ப்போகும்.
15. அவன் விழுங்கின ஆஸ்தியைக் கக்குவான்; தேவன் அதை அவன் வயிற்றிலிருந்து வெளியே தள்ளிவிடுவார்.
16. அவன் விரியன்பாம்புகளின் விஷத்தை உறிஞ்சுவான்; விரியனின் நாக்கு அவனைக் கொல்லும்.
17. தேனும் நெய்யும் ஓடும் வாய்க்கால்களையும் ஆறுகளையும் அவன் காண்பதில்லை.
18. தான் பிரயாசப்பட்டுத் தேடினதை அவன் விழுங்காமல் திரும்பக் கொடுப்பான்; அவன் திரும்பக் கொடுக்கிறது அவன் ஆஸ்திக்குச் சரியாயிருக்கும்; அவன் களிகூராதிருப்பான்.
19. அவன் ஒடுக்கி, ஏழைகளைக் கைவிட்டு, தான் கட்டாத வீட்டைப் பறித்தபடியினாலும்,
20. தன் வயிறு திருப்தியற்றிருந்தபடியினாலும், அவன் இச்சித்த காரியங்களில் அவனுக்கு ஒன்றும் இருப்பதில்லை.
21. அவன் போஜனத்தில் ஒன்றும் மீதியாவதில்லை; ஆகையால் அவன் ஆஸ்தி நிலைநிற்பதில்லை.
22. அவன் வேண்டுமென்கிற பரிபூரணம் அவனுக்கு வந்தபின், அவனுக்கு வியாகுலம் உண்டாகும்; சிறுமைப்படுகிற ஒவ்வொருவருடைய கையும் அவன்மேல் வரும்.
23. தன் வயிற்றை நிரப்பத்தக்கது இன்னும் அவனுக்கு இருந்தாலும், அவர் அவன்மேல் தமது கோபத்தின் உக்கிரத்தை வரவிட்டு, அவன் போஜனம்பண்ணுகையில், அதை அவன்மேல் சொரியப்பண்ணுவார்.
24. இருப்பு ஆயுதத்துக்கு அவன் தப்பியோடினாலும் உருக்குவில் அவனை உருவ எய்யும்.