17. அப்படியே இரண்டு தாலந்தை வாங்கினவனும், வேறு இரண்டு தாலந்தைச் சம்பாதித்தான்.
18. ஒரு தாலந்தை வாங்கினவனோ, போய், நிலத்தைத் தோண்டி, தன் எஜமானுடைய பணத்தைப் புதைத்துவைத்தான்.
19. வெகுகாலமானபின்பு அந்த ஊழியக்காரருடைய எஜமான் திரும்பிவந்து, அவர்களிடத்தில் கணக்குக் கேட்டான்.
20. அப்பொழுது, ஐந்து தாலந்தை வாங்கினவன், வேறு ஐந்து தாலந்தைக் கொண்டுவந்து: ஆண்டவனே, ஐந்து தாலந்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ, வேறு ஐந்து தாலந்தைச் சம்பாதித்தேன் என்றான்.
21. அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.
22. இரண்டு தாலந்தை வாங்கினவனும் வந்து: ஆண்டவனே, இரண்டு தாலந்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ, வேறு இரண்டு தாலந்தைச் சம்பாதித்தேன் என்றான்.
23. அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.