11. ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவானஸ்நானனைப்பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; ஆகிலும், பரலோகராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்கு மெய்யாகவே சொல்லுகிறேன்.
12. யோவான்ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோகராஜ்யம் பலவந்தம்பண்ணப்படுகிறது; பலவந்தம்பண்ணுகிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள்.
13. நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகள் யாவரும் யோவான்வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்ததுண்டு.
14. நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான்.
15. கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.
16. இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? சந்தைவெளிகளில் உட்கார்ந்து, தங்கள் தோழரைப் பார்த்து:
17. உங்களுக்காகக் குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் மாரடிக்கவில்லை என்று குறைசொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறது.
18. எப்படியெனில், யோவான் போஜனபானம்பண்ணாதவனாய் வந்தான்; அதற்கு அவர்கள்: அவன் பிசாசுபிடித்திருக்கிறவன் என்றார்கள்.
19. மனுஷகுமாரன் போஜனபானம்பண்ணுகிறவராய் வந்தார்; அதற்கு அவர்கள்: இதோ, போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறார்கள். ஆனாலும், ஞானமானது அதன் பிள்ளைகளால் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்றார்.
20. அப்பொழுது, தமது பலத்தசெய்கைகளில், அதிகமானவைகளைச் செய்யக்கண்ட பட்டணங்கள் மனந்திரும்பாமற்போனபடியினால் அவைகளை அவர் கடிந்துகொள்ளத் தொடங்கினார்.
21. கோராசினே! உனக்கு ஐயோ, பெத்சாயிதாவே! உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து மனந்திரும்பியிருப்பார்கள்.
22. நியாயத்தீர்ப்புநாளிலே உங்களுக்கு நேரிடுவதைப்பார்க்கிலும், தீருவுக்கும் சீதோனுக்கும் நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
23. வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளபரியந்தம் தாழ்த்தப்படுவாய்; உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலே செய்யப்பட்டிருந்ததானால், அது இந்நாள்வரைக்கும் நிலைத்திருக்கும்.
24. நியாயத்தீர்ப்புநாளிலே உனக்கு நேரிடுவதைப்பார்க்கிலும், சோதோம் நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
25. அந்தச் சமயத்திலே இயேசு சொன்னது: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.