நெகேமியா 5:4-10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

4. இன்னும் சிலர்: ராஜாவுக்குத் தீர்வைசெலுத்த, நாங்கள் எங்கள் நிலங்கள்மேலும் எங்கள் திராட்சத்தோட்டங்கள்மேலும், பணத்தைக் கடனாக வாங்கினோம் என்றும்;

5. எங்கள் உடலும் எங்கள் சகோதரர் உடலும் சரி; எங்கள் பிள்ளைகளும் அவர்கள் பிள்ளைகளும் சரி; ஆனாலும், இதோ, நாங்கள் எங்கள் குமாரரையும் எங்கள் குமாரத்திகளையும் அடிமைத்தனத்திற்கு உட்படுத்தவேண்டியதாயிருக்கிறது; அப்படியே எங்கள் குமாரத்திகளில் சிலர் அடிமைப்பட்டுமிருக்கிறார்கள்; அவர்களை மீட்க எங்களுக்கு நிர்வாகமில்லை; எங்கள் நிலங்களும் எங்கள் திராட்சத்தோட்டங்களும் வேறே மனிதர் கைவசமாயிற்று என்றார்கள்.

6. அவர்கள் கூக்குரலையும், இந்த வார்த்தைகளையும் நான் கேட்டபோது, மிகவும் கோபங்கொண்டு,

7. என் மனதிலே ஆலோசனைபண்ணி, பிற்பாடு பிரபுக்களையும் அதிகாரிகளையும் கடிந்துகொண்டு: நீங்கள் அவரவர் தங்கள் சகோதரர்மேல் ஏன் வட்டி சுமத்துகிறீர்கள் என்று சொல்லி, அவர்களுக்கு விரோதமாக ஒரு பெரிய சபை கூடிவரச்செய்து,

8. அவர்களை நோக்கி: புறஜாதியாருக்கு விற்கப்பட்ட யூதராகிய எங்கள் சகோதரரை நாங்கள் எங்கள் சக்திக்குத்தக்கதாய் மீட்டிருக்கையில், நீங்கள் திரும்ப உங்கள் சகோதரரை விற்கலாமா? இவர்கள் நமக்கு விலைப்பட்டுப்போகலாமா என்றேன்; அப்பொழுது அவர்கள் மறு உத்தரவு சொல்ல இடமில்லாமல் மவுனமாயிருந்தார்கள்.

9. பின்னும் நான் அவர்களை நோக்கி: நீங்கள் செய்கிற காரியம் நல்லதல்ல; நம்முடைய பகைஞராகிய புறஜாதியார் நிந்திக்கிறதினிமித்தம் நீங்கள் நம்முடைய தேவனுக்குப் பயந்து நடக்கவேண்டாமா?

10. நானும் என் சகோதரரும் என் வேலைக்காரரும் இவ்விதமாகவா அவர்களுக்குப் பணமும் தானியமும் கடன் கொடுத்திருக்கிறோம்? இந்த வட்டியை விட்டுவிடுவோமாக.

நெகேமியா 5