16. ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.
17. அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.
18. அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்.
19. சகல பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாயிருக்கவும்,
20. அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று.
21. முன்னே அந்நியராயும் துர்க்கிரியைகளினால் மனதிலே சத்துருக்களாயும் இருந்த உங்களையும் பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்கு முன்நிறுத்தும்படியாக அவருடைய மாம்சசரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார்.
22. நீங்கள் கேட்ட சுவிசேஷத்தினால் உண்டாகும் நம்பிக்கையைவிட்டு அசையாமல், ஸ்திரமாயும் உறுதியாயும் விசுவாசத்திலே நிலைத்திருப்பீர்களானால் அப்படியாகும்.
23. அந்தச் சுவிசேஷம் வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டுவருகிறது; அதற்கென்றே பவுலாகிய நான் ஊழியக்காரனானேன்.
24. இப்பொழுது நான் உங்கள்நிமித்தம் அநுபவிக்கிற பாடுகளில் சந்தோஷமடைந்து, கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை அவருடைய சரீரமாகிய சபைக்காக, என் மாம்சத்திலே நிறைவேற்றுகிறேன்.
25. ஆதிகாலங்களுக்கும் தலைமுறை தலைமுறைகளுக்கும் மறைவாயிருந்து, இப்பொழுது அவருடைய பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கப்பட்ட இரகசியமாகிய தேவவசனத்தைப் பூரணமாய்த் தெரியப்படுத்துகிறதற்கு,
26. உங்கள்பொருட்டு தேவனால் எனக்கு அளிக்கப்பட்ட உத்தியோகத்தின்படியே நான் அந்தச் சபைக்கு ஊழியக்காரனானேன்.
27. புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்.
28. எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம் பண்ணுகிறோம்.
29. அதற்காக நான் எனக்குள்ளே வல்லமையாய்க் கிரியை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்படுகிறேன்.