எரேமியா 49:12-21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

12. கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, பாத்திரத்தில் குடிக்கவேண்டுமென்கிற நியாயத்தீர்ப்புக்கு உள்ளாயிராதவர்கள் அதில் குடித்தார்கள்; நீ குற்றமற்று நீங்கலாயிருப்பாயோ? நீ நீங்கலாயிராமல் அதில் நிச்சயமாய்க் குடிப்பாய்.

13. போஸ்றா பாழும் நிந்தையும் அவாந்தரமும் சாபமுமாக இருக்குமென்றும், அதின் பட்டணங்கள் எல்லாம் நித்திய வனாந்தரங்களாயிருக்குமென்றும் என்னைக்கொண்டு ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

14. நீங்கள் கூடிக்கொண்டு, அதற்கு விரோதமாக வந்து, யுத்தம்பண்ணுகிறதற்கு எழும்புங்கள் என்று சொல்ல, ஜாதிகளிடத்தில் ஸ்தானாதிபதியை அனுப்புகிற செய்தியைக் கர்த்தரிடத்திலே கேள்விப்பட்டேன்.

15. இதோ, உன்னை ஜாதிகளுக்குள்ளே சிறியதும், மனுஷருக்குள்ளே அசட்டை பண்ணப்பட்டதுமாக்குகிறேன் என்கிறார்.

16. கன்மலை வெடிப்புகளில் வாசம்பண்ணி, மேடுகளின் உச்சியைப் பிடித்திருக்கிற உன்னால் உன் பயங்கரமும் உன் இருதயத்தின் அகந்தையும் உன்னை மோசம்போக்கிற்று; நீ கழுகைப்போல் உயரத்தில் உன் கூட்டைக் கட்டினாலும் அங்கேயிருந்து உன்னை விழப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

17. அப்படியே ஏதோம் பாழாகும்; அதைக் கடந்துபோகிறவன் எவனும் அதின் எல்லா வாதைகளினிமித்தமும் பிரமித்து ஈசல்போடுவான்.

18. சோதோமும் கொமோராவும் அவைகளின் சுற்றுப்புறங்களும் கவிழ்க்கப்பட்டதுபோல இதுவும் கவிழ்க்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அங்கே ஒருவனும் குடியிருப்பதில்லை, அதில் ஒரு மனுபுத்திரனும் தங்குவதில்லை.

19. இதோ, புரண்டு ஓடுகிற யோர்தானிடத்திலிருந்து சிங்கம் வருவதுபோல் பலவானுடைய தாபரத்துக்கு விரோதமாக வருகிறான்; அவனைச் சடிதியிலே அங்கேயிருந்து ஓடிவரப்பண்ணுவேன்; நான் அதற்கு விரோதமாய்க் கட்டளையிட்டு அனுப்பத்தெரிந்துகொள்ளப்பட்டவன் யார்? எனக்குச் சமானமானவன் யார்? எனக்கு மட்டுக்கட்டுகிறவன் யார்? எனக்கு முன்பாக நிலைநிற்கப்போகிற மேய்ப்பன் யார்?

20. ஆகையால் கர்த்தர் ஏதோமுக்கு விரோதமாக யோசித்த ஆலோசனையையும், அவர் தேமானின் குடிகளுக்கு விரோதமாக நினைத்திருக்கிற நினைவுகளையும் கேளுங்கள்; மந்தையில் சிறியவர்கள் மெய்யாகவே அவர்களைப் பிடித்திழுப்பார்கள், அவர்கள் இருக்கிற தாபரங்களை அவர் மெய்யாகவே பாழாக்குவார்.

21. அவைகளுக்குள் இடிந்துவிழும் சத்தத்தினாலே பூமி அதிரும்; கூக்குரலின் சத்தம் சிவந்த சமுத்திரமட்டும் கேட்கப்படும்.

எரேமியா 49