11. ஆனாலும் அதற்குப்பின்பு அவர்கள் மாறாட்டம்பண்ணி, தாங்கள் சுயாதீனராக அனுப்பிவிட்ட வேலைக்காரரையும் வேலைக்காரியையும் மறுபடியும் அழைப்பித்து, அவர்களை வேலைக்காரரும் வேலைக்காரிகளுமாயிருக்கும்படி அடிமைப்படுத்திக்கொண்டார்கள்.
12. ஆதலால், கர்த்தராலே எரேமியாவுக்கு வார்த்தை உண்டாகி, அவர்:
13. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், அவனவன் தனக்கு விற்கப்பட்ட எபிரெயனாகிய தன் சகோதரனை முடிவிலே நீங்கள் ஏழாம் வருஷத்திலே அனுப்பிவிடவேண்டும் என்றும், அவன் உனக்கு ஆறுவருஷம் அடிமையாயிருந்தபின்பு, அவனை உன்னிடத்தில் வைக்காமல் சுயாதீனனாக அனுப்பிவிடவேண்டும் என்றும்,
14. நான் உங்கள் பிதாக்களை அடிமைவீடாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின நாளிலே அவர்களோடே உடன்படிக்கைபண்ணினேன்; ஆனாலும் உங்கள் பிதாக்கள் என் சொல்லைக் கேளாமலும், தங்கள் செவியைச் சாயாமலும் போனார்கள்.
15. நீங்களோ, இந்நாளிலே மனந்திரும்பி, அவனவன் தன் அயலானுக்கு விடுதலையைக் கூறின விஷயத்திலே என் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, என் நாமம் தரிக்கப்பட்ட ஆலயத்திலே இதற்காக என் முகத்துக்குமுன் உடன்படிக்கைபண்ணியிருந்தீர்கள்.