4. இந்த வார்த்தையின்படியே நீங்கள் மெய்யாய்ச் செய்வீர்களாகில், தாவீதின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிற ராஜாக்கள் இரதங்கள்மேலும் குதிரைகள்மேலும் ஏறி, அவனும் அவன் ஊழியக்காரரும் அவன் ஜனமுமாக இந்த அரமனை வாசல்களின் வழியாய் உட்பிரவேசிப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
5. நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேளாமற்போனீர்களேயாகில் இந்த அரமனை பாழாய்ப்போகும் என்று என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
6. யூதா ராஜாவின் அரமனையைக் குறித்துக் கர்த்தர்: நீ எனக்குக் கீலேயாத்தைப்போலவும் லீபனோனின் கொடுமுடியைப்போலவும் இருக்கிறாய்; ஆனாலும் மெய்யாகவே நான் உன்னை வனாந்தரத்தைப்போலவும், குடியில்லாத பட்டணங்களைப்போலவும் ஆக்கிவிடுவேன்.
7. சங்காரக்காரரை அவரவர் ஆயுதங்களோடுங்கூட நான் உனக்கு விரோதமாக ஆயத்தப்படுத்துவேன்; உன் உச்சிதமான கேதுருக்களை அவர்கள் வெட்டி, அக்கினியிலே போடுவார்கள்.
8. அநேகம் ஜாதிகள் இந்த நகரத்தைக் கடந்துவந்து, அவனவன் தன்தன் அயலானை நோக்கி: இந்தப் பெரிய நகரத்துக்குக் கர்த்தர் இப்படிச் செய்தது என்னவென்று கேட்பார்கள்.