4. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, உங்களை அலங்கத்துக்கு வெளியே முற்றிக்கைபோட்ட பாபிலோன் ராஜாவோடும் கல்தேயரோடும், நீங்கள் யுத்தம்பண்ணும்படி உங்கள் கைகளில் பிடித்திருக்கிற யுத்த ஆயுதங்களை நான் திருப்பிவிட்டு, அவர்களை இந்த நகரத்தின் நடுவிலே சேர்த்து,
5. நான் நீட்டின கையினாலும் பலத்தபுயத்தினாலும் கோபமும் உக்கிரமும் மகா கடுமையுமாக உங்களோடே யுத்தம்பண்ணி,
6. இந்த நகரத்தின் குடிகளையும், மனுஷரையும், மிருகங்களையும் சங்கரிப்பேன்; மகா கொள்ளை நோயால் சாவார்கள்.
7. அதற்குப்பின்பு நான் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவையும், அவன் ஊழியக்காரரையும், ஜனத்தையும், இந்த நகரத்திலே கொள்ளைநோய்க்கும் பட்டயத்துக்கும் பஞ்சத்துக்கும் தப்பி மீதியானவர்களையும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருடைய கையிலும், அவர்கள் சத்துருக்களின் கையிலும், அவர்கள் பிராணனை வாங்கத்தேடுகிறவர்களின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன்; அவன் அவர்களைப் பட்டயக் கருக்கினால் வெட்டுவான்; அவன் அவர்களைப் தப்பவிடுவதுமில்லை, அவன் மன்னிப்பதுமில்லை, இரங்குவதுமில்லையென்று கர்த்தர் உரைக்கிறார் என்றான்.
8. பின்னையும் அவர், இந்த ஜனங்களை நோக்கி: இதோ, நான் உங்கள் முன்னே ஜீவவழியையும் மரணவழியையும் வைக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
9. இந்த நகரத்திலே தரிக்கிறவன் பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் சாவான்; உங்களை முற்றிக்கைபோடும் கல்தேயர் வசமாய்ப் புறப்பட்டுப்போய்விடுகிறவனோ பிழைப்பான்; அவன் பிராணன் அவனுக்குக் கிடைத்த கொள்ளைப்பொருளைப்போல் இருக்கும்.