12. நான் உங்கள்மேல் என் ஜனமாகிய இஸ்ரவேலின் மனுஷரை நடமாடப்பண்ணுவேன், அவர்கள் உன்னைக் கையாளுவார்கள்; அவர்களுக்குச் சுதந்தரமாயிருப்பாய்; நீ இனிமேல் அவர்களைச் சாகக்கொடுப்பதில்லை.
13. கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: ஜனங்கள் உன்னைப்பார்த்து: நீ மனுஷரைப் பட்சிக்கிற தேசமென்றும், நீ உன் ஜனங்களைச் சாகக்கொடுக்கிற தேசமென்றும் சொல்லுகிறபடியினால்,
14. நீ இனிமேல் மனுஷரைப் பட்சிப்பதுமில்லை, இனிமேல் உன் ஜனங்களைச் சாகக்கொடுப்பதுமில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
15. நான் இனிமேல் புறஜாதிகள் செய்யும் அவமானத்தை உன்னிடத்திலே கேட்கப்பண்ணுவதுமில்லை, நீ ஜனங்களின் நிந்தையை இனிமேல் சுமப்பதுமில்லை; நீ இனிமேல் உன் ஜாதிகளைச் சாகக்கொடுப்பதுமில்லையென்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
16. பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
17. மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தார் தங்கள் சுயதேசத்திலே குடியிருக்கையில் அதைத் தங்கள் நடக்கையினாலும் தங்கள் கிரியைகளினாலும் தீட்டுப்படுத்தினார்கள்; அவர்களுடைய நடக்கை என் முகத்துக்கு முன்பாக தூரஸ்திரீயின் தீட்டைப்போல் இருந்தது.
18. ஆகையினால் தேசத்திலே அவர்கள் சிந்தின இரத்தத்தினிமித்தமும், அதை அவர்கள் தங்கள் நரகலான விக்கிரகங்களால் தீட்டுப்படுத்தினதினிமித்தமும் நான் என் உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றி,
19. அவர்களைப் புறஜாதிகளுக்குள்ளே சிதறடித்தேன்; தேசங்களில் தூற்றிப்போடப்பட்டார்கள்; அவர்களுடைய நடக்கையின்படியேயும் அவர்களுடைய கிரியைகளின்படியேயும் அவர்களை நியாயந்தீர்த்தேன்,
20. அவர்கள் புறஜாதிகளிடத்தில் போனபோது அந்த ஜனங்கள் இவர்களைக்குறித்து: இவர்கள் கர்த்தருடைய ஜனங்கள், அவருடைய தேசத்திலிருந்து வந்தார்கள் என்று சொன்னதினால், இவர்கள் என் பரிசுத்தநாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினார்கள்.