13. திரளான தண்ணீர்களின் கரைகளில் நடமாடுகிற அதின் மிருகஜீவன்களையெல்லாம் அழிப்பேன்; இனி மனுஷனுடைய கால் அவைகளைக் கலக்குவதுமில்லை, மிருகங்களுடைய குளம்புகள் அவைகளைக் குழப்புவதுமில்லை.
14. அப்பொழுது அவர்களுடைய தண்ணீர்களைத் தெளியப்பண்ணி, அவர்கள் ஆறுகளை எண்ணெயைப்போல் ஓடப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
15. நான் எகிப்துதேசத்தைப் பாழாக்கும்போதும், தேசம் தன் நிறைவை இழந்து வெறுமையாய்க் கிடக்கும்போதும், நான் அதில் குடியிருக்கிற யாவரையும் சங்கரிக்கும்போதும், நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.
16. இது புலம்பல்; இப்படிப் புலம்புவார்கள்; இப்படி ஜாதிகளின் குமாரத்திகள் புலம்புவார்கள்; இப்படி எகிப்துக்காகவும், அதினுடைய எல்லாத் திரளான ஜனங்களுக்காகவும் புலம்புவார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
17. பின்னும் பன்னிரண்டாம் வருஷம் அந்த மாதத்தின் பதினைந்தாந்தேதியிலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
18. மனுபுத்திரனே, நீ எகிப்தினுடைய ஏராளமான ஜனத்தினிமித்தம் புலம்பி, அவர்களையும் பிரபலமான ஜாதிகளின் குமாரத்திகளையும் குழியில் இறங்கினவர்கள் அண்டையிலே பூமியின் தாழ்விடங்களில் தள்ளிவிடு.
19. மற்றவர்களைப்பார்க்கிலும் நீ அழகில் சிறந்தவளோ? நீ இறங்கி, விருத்தசேதனமில்லாதவர்களிடத்தில் கிட.
20. அவர்கள் பட்டயத்தால் வெட்டுண்டவர்களின் நடுவிலே விழுவார்கள், பட்டயத்துக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறார்கள்; அவளையும் அவளுடைய ஜனத்திரள் யாவையும் பிடித்திழுங்கள்.