1. ஒருவன் ஒரு ஸ்திரீயை விவாகம்பண்ணிக்கொண்டபின்பு, அவளிடத்தில் இலச்சையான காரியத்தைக் கண்டு, அவள்மேல் பிரியமற்றவனானால், அவன் தள்ளுதலின் சீட்டை எழுதி, அவள் கையிலே கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிடலாம்.
2. அவள் அவனுடைய வீட்டைவிட்டுப் போனபின்பு, வேறொருவனுக்கு மனைவியாகலாம்.
3. அந்த இரண்டாம் புருஷனும் அவளை வெறுத்து, தள்ளுதலின் சீட்டை எழுதி, அவள் கையிலே கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிட்டாலும், அவளை விவாகம்பண்ணின அந்த இரண்டாம் புருஷன் இறந்துபோனாலும்,
4. அவள் தீட்டுப்பட்டபடியினால், அவளைத் தள்ளிவிட்ட அவளுடைய முந்தின புருஷன் திரும்பவும் அவளை மனைவியாகச் சேர்த்துக்கொள்ளக்கூடாது; அது கர்த்தருக்கு முன்பாக அருவருப்பானது; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தின்மேல் பாவம் வரப்பண்ணாயாக.
5. ஒருவன் ஒரு பெண்ணைப் புதிதாய் விவாகம்பண்ணியிருந்தால், அவன் யுத்தத்திற்குப் புறப்படவேண்டாம்; அவன்மேல் யாதொரு வேலையும் சுமத்தவேண்டாம்; அவன் ஒரு வருஷபரியந்தம் தன் வீட்டில் தன் இஷ்டப்படியிருந்து, தான் விவாகம்பண்ணின ஸ்திரீயைச் சந்தோஷப்படுத்துவானாக.
6. திரிகையின் அடிக்கல்லையாவது அதின் மேற்கல்லையாவது ஒருவரும் அடகாக வாங்கக்கூடாது; அது ஜீவனை அடகுவாங்குவதுபோலாகும்.