17. ஜெப ஆலயத்தில் யூதரோடும், பக்தியுள்ளவர்களோடும், சந்தைவெளியில் எதிர்ப்பட்டவர்களோடும் தினந்தோறும் சம்பாஷணைபண்ணினான்.
18. அப்பொழுது எப்பிக்கூரரும் ஸ்தோயிக்கருமான ஞானிகளில் சிலர் அவனுடனே வாக்குவாதம் பண்ணினார்கள். சிலர்: இந்த வாயாடி என்ன பேசப்போகிறான் என்றார்கள். சிலர்: இவன் அந்நிய தேவதைகளை அறிவிக்கிறவனாகக் காண்கிறது என்றார்கள். அவன் இயேசுவையும் உயிர்தெழுதலையும் அவர்களுக்குப் பிரசங்கித்தபடியினாலே அப்படிச் சொன்னார்கள்.
19. அவர்கள் அவனை மார்ஸ் மேடைக்கு அழைத்துக்கொண்டுபோய்: நீ சொல்லுகிற புதிதான உபதேசம் இன்னதென்று நாங்கள் அறியலாமா?
20. நூதனமான காரியங்களை எங்கள் காதுகள் கேட்கப்பண்ணுகிறாய்; அவைகளின் கருத்து இன்னதென்று அறியமனதாயிருக்கிறோம் என்றார்கள்.
21. அந்த அத்தேனே பட்டணத்தாரெல்லாரும், அங்கே தங்குகிற அந்நியரும், நவமான காரியங்களைச் சொல்லுகிறதிலும் கேட்கிறதிலுமேயொழிய வேறொன்றிலும் பொழுதுபோக்குகிறதில்லை.
22. அப்பொழுது பவுல் மார்ஸ் மேடையின் நடுவிலே நின்று: அத்தேனரே, எந்த விஷயத்திலும் நீங்கள் மிகுந்த தேவதாபக்தியுள்ளவர்களென்று காண்கிறேன்.