அப்போஸ்தலர் 14:15-28 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

15. மனுஷரே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப்போலப் பாடுள்ள மனுஷர்தானே; நீங்கள் இந்த வீணான தேவர்களைவிட்டு, வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவனிடத்திற்குத் திரும்பவேண்டுமென்று உங்களுக்குப் பிரசங்கிக்கிறோம்.

16. சென்ற காலங்களில் அவர் சகல ஜனங்களையும் தங்கள்தங்கள் வழிகளிலே நடக்கவிட்டிருந்தும்,

17. அவர் நன்மை செய்துவந்து, வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்பி, இவ்விதமாய் அவர் தம்மைக்குறித்துச் சாட்சி விளங்கப்பண்ணாதிருந்ததில்லை என்றார்கள்.

18. இப்படி அவர்கள் சொல்லியும் தங்களுக்கு ஜனங்கள் பலியிடாதபடிக்கு அவர்களை அமர்த்துகிறது அரிதாயிருந்தது.

19. பின்பு அந்தியோகியாவிலும் இக்கோனியாவிலுமிருந்து சில யூதர்கள் வந்து, ஜனங்களுக்குப் போதனைசெய்து, பவுலைக் கல்லெறிந்து, அவன் மரித்துப்போனானென்று எண்ணி, அவனைப் பட்டணத்துக்கு வெளியிலே இழுத்துக்கொண்டுபோனார்கள்.

20. சீஷர்கள் அவனைச் சூழ்ந்துநிற்கையில், அவன் எழுந்து, பட்டணத்திற்குள் பிரவேசித்தான். மறுநாளில் பர்னபாவுடனேகூடத் தெர்பைக்குப் புறப்பட்டுப்போனான்.

21. அந்தப் பட்டணத்தில் அவர்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, அநேகரைச் சீஷராக்கினபின்பு, லீஸ்திராவுக்கும் இக்கோனியாவுக்கும் அந்தியோகியாவுக்கும் திரும்பிவந்து,

22. சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள்.

23. அல்லாமலும் அந்தந்தச் சபைகளில் அவர்களுக்கு மூப்பர்களை ஏற்படுத்திவைத்து, உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள் விசுவாசித்துப் பற்றிக்கொண்ட கர்த்தருக்கு அவர்களை ஒப்புவித்தார்கள்.

24. பின்பு பிசீதியா நாட்டைக் கடந்து, பம்பிலியா நாட்டிற்கு வந்து,

25. பெர்கே ஊரில் வசனத்தைப் பிரசங்கித்து, அத்தலியா பட்டணத்திற்குப் போனார்கள்.

26. அங்கே கப்பல் ஏறி, தாங்கள் நிறைவேற்றின கிரியைக்காக தேவனுடைய கிருபைக்கு ஒப்புவிக்கப்பட்டுப் புறப்பட்டு அந்தியோகியாவுக்கு வந்தார்கள்.

27. அவர்கள் அங்கே சேர்ந்தபொழுது சபையைக் கூடிவரச்செய்து, தேவன் தங்களைக்கொண்டு செய்தவைகளையும், அவர் புறஜாதிகளுக்கு விசுவாசத்தின் கதவைத் திறந்ததையும் அறிவித்து,

28. அங்கே சீஷருடனேகூட அநேகநாள் சஞ்சரித்திருந்தார்கள்.

அப்போஸ்தலர் 14