16. அப்படியே ராஜாவாகிய யோசியாவினுடைய கட்டளைப்படி, பஸ்காவை ஆசரிக்கிறதற்கும், கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலிகளை இடுகிறதற்கும் அடுத்த கர்த்தருடைய ஆராதனையெல்லாம் அன்றையதினம் திட்டமாய்ச் செய்யப்பட்டது.
17. அங்கே வந்திருந்த இஸ்ரவேல் புத்திரர் அக்காலத்தில் பஸ்காவையும், புளிப்பில்லாத அப்பப்பண்டிகையையும் ஏழு நாளளவும் ஆசரித்தார்கள்.
18. தீர்க்கதரிசியாகிய சாமுவேலின் நாள் தொடங்கி, இஸ்ரவேலிலே அப்படிக்கொத்த பஸ்கா ஆசரிக்கப்படவில்லை; யோசியாவும், ஆசாரியரும், லேவியரும், யூதாவனைத்தும், இஸ்ரவேலில் வந்திருந்தவர்களும், எருசலேமின் குடிகளும் ஆசரித்த பஸ்காவைப்போல இஸ்ரவேல் ராஜாக்களில் ஒருவரும் ஆசரித்ததில்லை.
19. யோசியாவுடைய ராஜ்யபாரத்தின் பதினெட்டாம் வருஷத்திலே இந்தப் பஸ்கா ஆசரிக்கப்பட்டது.
20. யோசியா தேவாலயத்திற்கு அடுத்ததைத் திட்டப்படுத்தின இந்த எல்லா நடபடிகளுக்கும்பின்பு, எகிப்தின் ராஜாவாகிய நேகோ ஐபிராத்து நதியோரமான கர்கேமிஸ் பட்டணத்தின்மேல் யுத்தம் பண்ணவந்தான்; அப்பொழுது யோசியா அவனுக்கு விரோதமாய் யுத்தஞ்செய்யப்புறப்பட்டான்.