1. கர்த்தர் ராஜாவைச் சுற்றிலும் இருந்த அவனுடைய எல்லாச் சத்துருக்களுக்கும் அவனை நீங்கலாக்கி, இளைப்பாறப்பண்ணினபோது, அவன் தன் வீட்டிலே வாசமாயிருக்கையில்,
2. ராஜா தீர்க்கதரிசியாகிய நாத்தானை நோக்கி: பாரும், கேதுரு மரங்களால் செய்யப்பட்ட வீட்டிலே நான் வாசம்பண்ணும்போது, தேவனுடைய பெட்டி திரைகளின் நடுவே வாசமாயிருக்கிறதே என்றான்.
3. அப்பொழுது நாத்தான் ராஜாவை நோக்கி: நீர் போய் உம்முடைய இருதயத்தில் உள்ளபடியெல்லாம் செய்யும்; கர்த்தர் உம்மோடு இருக்கிறாரே என்றான்.
4. அன்று இராத்திரியிலே கர்த்தருடைய வார்த்தை நாத்தானுக்கு உண்டாகி, அவர்:
5. நீ போய் என் தாசனாகிய தாவீதை நோக்கி: கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் வாசமாயிருக்கத்தக்க ஆலயத்தை நீ எனக்குக் கட்டுவாயோ?
6. நான் இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணின நாள்முதற்கொண்டு இந்நாள்வரைக்கும், நான் ஒரு ஆலயத்திலே வாசம்பண்ணாமல், கூடாரத்திலும் வாசஸ்தலத்திலும் உலாவினேன்.
7. நான் இஸ்ரவேலாகிய என் ஜனத்தை மேய்க்கும்படி கட்டளையிட்ட இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒரு கோத்திரத்தையாவது நோக்கி: நீங்கள் எனக்குக் கேதுரு மரத்தால் செய்யப்பட்ட ஆலயத்தைக் கட்டாதிருக்கிறது என்ன என்று நான் இஸ்ரவேல் புத்திரருக்குள் உலாவி வந்த எவ்விடத்திலாவது யாதொரு வார்த்தையைச் சொன்னதுண்டோ?