1. இதோ, ராஜா அப்சலோமுக்காக அழுது புலம்புகிறார் என்று யோவாபுக்கு அறிவிக்கப்பட்டது.
2. ராஜா தம்முடைய குமாரனுக்காக மனம் நொந்திருக்கிறார் என்று அன்றையதினம் ஜனங்கள் கேள்விப்பட்டார்கள்; அதினிமித்தம் அன்றையதினம் அந்த ஜெயம் ஜனத்திற்கெல்லாம் துக்கமாய் மாறிற்று.
3. யுத்தத்தில் முறிந்தோடுகிறதினால் வெட்கப்பட்டுத் திருட்டளவாய் வருகிறவர்கள்போல, ஜனங்கள் அன்றையதினம் திருட்டளவாய்ப் பட்டணத்திற்குள் வந்தார்கள்.
4. ராஜா தன் முகத்தை மூடிக்கொண்டு, மகா சத்தமாய்: என் மகனாகிய அப்சலோமே, அப்சலோமாகிய என் மகனே, என் மகனே என்று அலறிக்கொண்டிருந்தான்.
5. அப்பொழுது யோவாப் வீட்டிற்குள்ளே ராஜாவினிடத்திலே போய்: இன்று உம்முடைய ஜீவனையும், உம்முடைய குமாரர் குமாரத்திகளின் ஜீவனையும், உம்முடைய மனைவிகளின் ஜீவனையும், உம்முடைய மறுமனையாட்டிகளின் ஜீவனையும் தப்புவித்த உம்முடைய ஊழியக்காரர் எல்லாரின் முகத்தையும் வெட்கப்படுத்தினீர்; இன்று நீர் உம்மைப் பகைக்கிறவர்களைச் சிநேகித்து, உம்மைச் சிநேகிக்கிறவர்களைப் பகைக்கிறீர் என்று விளங்குகிறது.