4. மோவாபின் ராஜாவாகிய மேசா ஆடுமாடுகள் பெருத்தவனாயிருந்து, இஸ்ரவேலின் ராஜாவுக்கு இலட்சம் ஆட்டுக்குட்டிகளையும், இலட்சம் குறும்பாட்டுக்குட்டிகளையும் செலுத்திவந்தான்.
5. ஆகாப் இறந்துபோனபின் மோவாபின் ராஜா இஸ்ரவேலின் ராஜாவுக்கு விரோதமாய்க் கலகம் பண்ணினான்.
6. அக்காலத்திலே யோராம் என்னும் ராஜா சமாரியாவிலிருந்து புறப்பட்டு, இஸ்ரவேலையெல்லாம் இலக்கம் பார்த்துப்போய்:
7. மோவாபின் ராஜா எனக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினான்; மோவாபியர்மேல் யுத்தம்பண்ண, என்னோடேகூட வருகிறீரா என்று யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தைக் கேட்டனுப்பினதற்கு; அவன் நான் வருகிறேன்; நான்தான், நீர், என்னுடைய ஜனங்கள் உம்முடைய ஜனங்கள், என்னுடைய குதிரைகள் உம்முடைய குதிரைகள் என்றான்.
8. எந்த வழியாய்ப் போவோம் என்று கேட்டான்; அதற்கு அவன்: ஏதோம் வனாந்தரவழியாய் என்றான்.
9. அப்படியே இஸ்ரவேலின் ராஜாவும் யூதாவின் ராஜாவும் ஏதோமின் ராஜாவும் சேர்ந்து போனார்கள்; ஆனாலும் அவர்கள் ஏழுநாள் சுற்றித்திரிந்தபோது, அவர்களைப் பின்செல்லுகிற இராணுவத்துக்கும் மிருகஜீவன்களுக்கும் தண்ணீர் இல்லாமற்போயிற்று.