2 இராஜாக்கள் 19:6-21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

6. அப்பொழுது ஏசாயா அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவின் ஊழியக்காரர் என்னைத் தூஷித்ததும் நீர் கேட்டதுமான வார்த்தைகளினாலே பயப்படாதேயும்.

7. இதோ, அவன் ஒரு செய்தியைக் கேட்டு, தன் தேசத்துக்குத் திரும்புவதற்கான ஆவியை நான் அவனுக்குள் அனுப்பி, அவனை அவன் தேசத்திலே பட்டயத்தால் விழப்பண்ணுவேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்பதை உங்கள் ஆண்டவனிடத்தில் சொல்லுங்கள் என்றான்.

8. அசீரியா ராஜா லாகீசைவிட்டுப் புறப்பட்டான் என்று கேள்விப்பட்டு, ரப்சாக்கே திரும்பிப்போய், அவன் லிப்னாவின்மேல் யுத்தம்பண்ணுகிறதைக் கண்டான்.

9. இதோ, எத்தியோப்பியா ராஜாவாகிய தீராக்கா உம்மோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டான் என்று சொல்லக் கேள்விப்பட்டான்; அப்பொழுது அவன் திரும்ப எசேக்கியாவினிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி:

10. நீங்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால், எருசலேம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லையென்று நீ நம்பியிருக்கிற உன் தேவன் உன்னை எத்த ஒட்டாதே.

11. இதோ, அசீரியா ராஜாக்கள் சகல தேசங்களையும் சங்கரித்த செய்தியை நீ கேட்டிருக்கிறாயே, நீ தப்புவாயோ?

12. என் பிதாக்கள் அழித்துவிட்ட கோசானையும் ஆரானையும் ரேத்சேப்பையும், தெலாசாரிலிருந்த ஏதேனின் புத்திரரையும், அவர்களுடைய தேவர்கள் தப்புவித்ததுண்டோ?

13. ஆமாத்தின் ராஜாவும், அர்பாத்தின் ராஜாவும், செப்பர்வாயிம் ஏனா ஈவா பட்டணங்களின் ராஜாவும் எங்கே? என்று சொல்லுங்கள் என்றான்.

14. எசேக்கியா ஸ்தானாபதிகளின் கையிலிருந்து நிருபத்தை வாங்கி வாசித்த பின்பு, அவன் கர்த்தரின் ஆலயத்திற்குப்போய், அதைக் கர்த்தருக்கு முன்பாக விரித்து,

15. கர்த்தரை நோக்கி: கேருபீன்களின் மத்தியில் வாசம்பண்ணுகிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே. நீர் ஒருவரே பூமியின் ராஜ்யங்களுக்கெல்லாம் தேவனானவர்; நீர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்,

16. கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்துக் கேளும்; கர்த்தாவே, நீர் உமது கண்களைத் திறந்துபாரும்; சனகெரிப் ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படிக்குச் சொல்லியனுப்பின வார்த்தைகளைக் கேளும்.

17. கர்த்தாவே, அசீரியா ராஜாக்கள் அந்த ஜாதிகளையும் அவர்கள் தேசத்தையும் நாசமாக்கி,

18. அவர்களுடைய தேவர்களை நெருப்பிலே போட்டுவிட்டது மெய்தான்; அவைகள் தேவர்கள் அல்லவே, மனுஷர் கைவேலையான மரமும் கல்லும்தானே; ஆகையால் அவைகளை நிர்த்தூளியாக்கினார்கள்.

19. இப்போதும் எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே தேவனாகிய கர்த்தர் என்று பூமியின் ராஜ்யங்கள் எல்லாம் அறியும்படிக்கு, எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம்பண்ணினான்.

20. அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா எசேக்கியாவுக்குச் சொல்லியனுப்பினது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், அசீரியா ராஜாவாகிய சனகெரிபின்நிமித்தம் நீ என்னை நோக்கிப் பண்ணின விண்ணப்பத்தைக் கேட்டேன்.

21. அவனைக்குறித்துக் கர்த்தர் சொல்லுகிற வசனமாவது: சீயோன் குமாரத்தியாகிய கன்னியாஸ்திரீ உன்னை இகழ்ந்து, உன்னைப் பரிகாசம்பண்ணுகிறாள்; எருசலேம் குமாரத்தி உன் பின்னாலே தலையைத் துலுக்குகிறாள்.

2 இராஜாக்கள் 19