24. அவன் பாதத்திலே விழுந்து: என் ஆண்டவனே, இந்தப் பாதகம் என்மேல் சுமரட்டும்; உம்முடைய அடியாளுடைய வார்த்தைகளை நீர் கேட்கும் பொருட்டாக உம்முடைய அடியாள் உமது செவி கேட்கப் பேசவேண்டும்.
25. என் ஆண்டவனாகிய நீர் நாபால் என்னும் இந்தப் பேலியாளின் மனுஷனை ஒரு பொருட்டாக எண்ணவேண்டாம்; அவன் பேர் எப்படியோ அப்படியே அவனும் இருக்கிறான்; அவன் பேர் நாபால், அவனுக்குப் பயித்தியமும் இருக்கிறது; உம்முடைய அடியாளாகிய நானோ, என் ஆண்டவன் அனுப்பின வாலிபரைக் காணவில்லை.
26. இப்பொழுதும் என் ஆண்டவனே, நீர் இரத்தம் சிந்த வரவும், உம்முடைய கை நீதியைச் சரிக்கட்டவும், கர்த்தர் உமக்கு இடங்கொடுக்கவில்லை என்பதைக் கர்த்தருடைய ஜீவனைக்கொண்டும், உம்முடைய ஜீவனைக்கொண்டும் சொல்லுகிறேன்; இப்போதும் உம்முடைய சத்துருக்களும், என் ஆண்டவனுக்கு விரோதமாகப் பொல்லாப்புத் தேடுகிறவர்களும், நாபாலைப்போல ஆகக்கடவர்கள்.
27. இப்போதும் உமது அடியாள் என் ஆண்டவனுக்குக் கொண்டுவந்த காணிக்கையை ஏற்றுக்கொண்டு, என் ஆண்டவனைப் பின்பற்றுகிற வாலிபருக்குக் கொடுப்பீராக.
28. உமது அடியாளின் பாதகத்தை மன்னியும், கர்த்தர் என் ஆண்டவனுக்கு நிலையான வீட்டை நிச்சயமாய்க் கட்டுவார்; என் ஆண்டவன் கர்த்தருடைய யுத்தங்களை நடத்துகிறவராமே; நீர் உயிரோடே இருக்கும் நாளில் ஒரு பொல்லாப்பும் உம்மிலே காணப்படாதிருப்பதாக.