20. சவுலும் அவனோடிருந்த ஜனங்களும் கூட்டங்கூடிப் போர்க்களத்திற்குப் போனார்கள்; ஒருவர் பட்டயம் ஒருவருக்கு விரோதமாயிருந்தபடியால் மகா அமளியுண்டாயிற்று.
21. இதற்குமுன் பெலிஸ்தருடன் கூடி அவர்களோடேகூடப் பாளயத்திலே திரிந்துவந்த எபிரெயரும், சவுலோடும் யோனத்தானோடும் இருக்கிற இஸ்ரவேலரோடே கூடிக்கொண்டார்கள்.
22. எப்பிராயீம் மலைகளில் ஒளித்துக்கொண்டிருந்த சகல இஸ்ரவேலரும் பெலிஸ்தர் முறிந்தோடுகிறதைக் கேள்விப்பட்டபோது, யுத்தத்திலே அவர்களை நெருங்கித் தொடர்ந்தார்கள்.
23. இப்படிக் கர்த்தர் அன்றையதினம் இஸ்ரவேலை இரட்சித்தார்; அந்த யுத்தம் பெத்தாவேன் மட்டும் நடந்தது.
24. இஸ்ரவேலர் அன்றையதினம் மிகுந்த வருத்தம் அடைந்தார்கள்; நான் என் சத்தருக்கள் கையிலே பழிவாங்கவேண்டும், சாயங்காலமட்டும் பொறுக்காமல் எவன் போஜனம் செய்கிறானோ, அவன் சபிக்கப்பட்டவன் என்று சவுல் ஜனங்களுக்கு ஆணையிட்டுச் சொல்லியிருந்தபடியால், ஜனங்களில் ஒருவரும் எவ்வளவேனும் போஜனம்பண்ணாதிருந்தார்கள்.
25. தேசத்து ஜனங்கள் எல்லாரும் ஒரு காட்டிலே வந்தார்கள்; அங்கே வெளியிலே தேன்கூடு கட்டியிருந்தது.
26. ஜனங்கள் காட்டிலே வந்தபோது, இதோ, தேன் ஒழுகிக்கொண்டிருந்தது; ஆனாலும் ஒருவனும் அதைத் தன் கையினாலே தொட்டுத் தன் வாயில் வைக்கவில்லை; ஜனங்கள் அந்த ஆணையினிமித்தம் பயப்பட்டார்கள்.
27. யோனத்தான் தன் தகப்பன் ஜனங்களுக்கு ஆணையிட்டதைக் கேள்விப்படவில்லை; அவன் தன் கையிலிருந்த கோலை நீட்டி, அதின் நுனியினாலே தேன்கூட்டைக் குத்தி, அதை எடுத்துத் தன் வாயிலே போட்டுக்கொண்டான்; அதினால் அவன் கண்கள் தெளிந்தது.
28. அப்பொழுது ஜனங்களில் ஒருவன்: இன்றைக்கு போஜனம் சாப்பிடுகிறவன் சபிக்கப்பட்டவன் என்று உம்முடைய தகப்பனார் ஜனங்களுக்கு உறுதியாய் ஆணையிட்டிருக்கிறார்; ஆகையினால் ஜனங்கள் விடாய்த்திருக்கிறார்கள் என்றான்.