29. சட்டங்களுக்கு நடுவே இருக்கிற அந்தச் சவுக்கைகளில் சிங்கங்களும், காளைகளும், கேருபீன்களும், சட்டங்களுக்கு மேலாக ஒரு திரணையும், சிங்கங்களுக்கும் காளைகளுக்கும் கீழாக சாய்வான வேலைப்பாடுள்ள ஜலதாரைகளும் அதனோடே இருந்தது.
30. ஒவ்வொரு ஆதாரத்திற்கு நாலு வெண்கல உருளைகளும், வெண்கலத் தட்டுகளும், அதின் நாலு கோடிகளுக்கு அச்சுகளும் இருந்தது; கொப்பரையின் கீழிருக்க, அந்தக் கொம்மைகள் ஒவ்வொன்றும் வார்ப்பு வேலையாக ஜலதாரைகளுக்கு நேராயிருந்தது.
31. திரணைகளுக்குள்ளான அதின் வாய் மேலாக ஒருமுழம் உயர்ந்திருந்தது; அதின் வாய் ஒன்றரை முழ சக்கராகாரமும் தட்டையுமாய், அதின் வாயின்மேல் சித்திரங்களும் செய்யப்பட்டிருந்தது; அவைகளின் சவுக்கைகள் விருத்தமாயிராமல் சதுரமாயிருந்தது.
32. அந்த நாலுஉருளைகள் சவுக்கைகளின் கீழும், உருளைகளின் அச்சுகள் ஆதாரத்திலும் இருந்தது; ஒவ்வொரு உருளை ஒன்றரை முழ உயரமாயிருந்தது.
33. உருளைகளின் வேலை இரதத்து உருளைகளின் வேலைக்கு ஒத்திருந்தது; அவைகளின் அச்சுகளும், சக்கரங்களும், வட்டங்களும், கம்பிகளும் எல்லாம் வார்ப்பு வேலையாயிருந்தது.
34. ஒவ்வொரு ஆதாரத்தினுடைய நாலு கோடிகளிலும், ஆதாரத்திலிருந்து புறப்படுகிற நாலு கொம்மைகள் இருந்தது.