29. ஏழுநாளளவும் அவர்கள் முகமுகமாய்ப் பாளயமிறங்கியிருந்தார்கள்; ஏழாம் நாளில் யுத்தம் கலந்து, இஸ்ரவேல் புத்திரர் ஒரே நாளிலே சீரியரில் இலட்சம் காலாட்களை மடங்கடித்தார்கள்.
30. மீதியானவர்கள் ஆப்பெக் பட்டணத்திற்குள் ஓடிப்போனார்கள்; அங்கே மீதியாயிருந்த இருபத்தேழாயிரம்பேரின்மேல் அலங்கம் இடிந்து விழுந்தது; பெனாதாத்தும் ஓடிப்போய் நகரத்திற்குள் புகுந்து, உள்ளறையிலே பதுங்கினான்.
31. அப்பொழுது அவன் ஊழியக்காரர் அவனை நோக்கி: இதோ, இஸ்ரவேல் வம்சத்து ராஜாக்கள் தயவுள்ள ராஜாக்கள் என்று கேட்டிருக்கிறோம்; நாங்கள் இரட்டுகளை எங்கள் அரைகளில் கட்டி, கயிறுகளை எங்கள் தலைகளில் சுற்றிக்கொண்டு, இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் போவோம்; ஒருவேளை உம்மை உயிரோடே வைப்பார் என்று சொல்லி,
32. இரட்டைத் தங்கள் அரைகளில் கட்டி, கயிறுகளைத் தங்கள் தலைகளில் சுற்றிக்கொண்டு, இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் வந்து: என்னை உயிரோடே வையும் என்று உமது அடியானாகிய பெனாதாத் விண்ணப்பம்பண்ணுகிறான் என்றார்கள். அதற்கு அவன், இன்னும் அவன் உயிரோடே இருக்கிறானா, அவன் என் சகோதரன் என்றான்.